Sunday, June 14, 2015

டி ஆர் ராஜகுமாரி -தமிழ்த் திரையின் முதல் கனவுக் கன்னி

பாதச் சுவடுகளில் புகு முன் இறைவணக்கம்.
1.உன் நிழலில் நான் வாழ்வதற்கு ஆசை கொண்டேன் இறைவா, என் நிழலில் உன்னைக் காண்பதற்கு நாளும் உன்னைத் தேடுகின்றேன்.
2.மின்னும் வின்மீன்கள் கத்தும் கடலலைகள்
வீசிடும் தென்றல் பேசிடும் பறவைகள்
மண்ணும் மாமலைகள் வான்முட்டும் நெடு மரங்கள்
காசினியில் உன் நிழலென இவைகளில் தேடியும் காண்கிலேன்.
3.உன் நிழலில் என் நிழல் மறைந்திருக்கின்றதென்ற
உன் குரலைக் கேட்டபின் உண்மை உணர்ந்தேன்.
என் நிழலில் உன் நிழலைக் கண்டுகொண்டேன் இறைவா
உன் நிழலில்  என்றும் நான் இனி வாழ்ந்திடுவேன்.

இனி பதிவு.


டி ஆர் ராஜகுமாரி.

தமிழ்த் திரைப் பட உலகின் முதல் கனவுக்கன்னி நேரு பெயர் பெற்ற கருப்பழகி டி ஆர் ராஜகுமாரிஉயின் வாழ்கையின் நிகழ்வுகளை எழுத முயல்கின்றேன்.

தஞ்சையில் ஒரு கலை குடும்பத்தில் 1922இல் பிறந்தார். பெயர் ராஜாயி என்பது. ராஜகுமாரியின் அத்தை எஸ் பி எல் தனலெட்சுமி சினிமாவில் நடித்து வந்தார். 46இல் நாதஸ்வர சக்கரவர்த்தி டி என் ராஜரத்தினம் பிள்ளை நடித்த காளமேகம் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க தனலட்சுமி ஒப்பந்தமானார். அவர் சென்னைக்கு படப்பிடிப்புக்குச் செல்லும் போது ராஜாகுமாரியும் உடன் சென்றார்.

சென்னையில் தங்கியிருந்த தனலட்சுமியை ஒரு படத்திற்கு ஒப்பந்தம் செய்வதற்கு டைரக்டர் கே சுப்ரமணியம் வந்திருந்தார்.எம் கே தியாகராஜ பாகவதரையும் எம் எஸ் சுப்புலட்சுமியையும்  திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தான்,

தனலட்சுமியிடம் சுப்ரமணியம் பேசிக்கொண்டிருந்த பொழுது ஒரு பெண் காபி கொண்டுவந்து கொடுத்தாள். கருப்பு நிறம். வேலைக்காரியோ என எண்ணும் உருவம். யார் இந்தப் பெண் என்று விசாரித்தார். என் சொந்தக்காரப் பெண் உதவிக்கு வந்திருக்கிறாள் என்றார் தனலட்சுமி.

நாளைக்கு இவளை ஸ்டூடியோவுக்கு அழைத்துவாருங்கள். மேக் அப் டெஸ்ட் போட்டுப் பார்ப்போம் என்று சொல்லி விட்டுச் சென்றார்.

மறுநாள் ராஜகுமாரி ஸ்டூடியோவுக்குச் சென்றார். அக்காலத்தில் புகழ் பெற்ற மேக் அப் மேன் ஹரி பாபு வுக்கு போன் செய்து ஒரு பெண்ணை அனுப்புகிறேன் மேக் அப் போட்டு அனுப்புங்கள் என்றார்.

மேக்கப் போடுவதற்கு காத்திருந்த ஹரிபாபு கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த பெண்ணைப் பார்த்து மிரண்டு போனார். யாரம்மா நீ என்று விசாரித்தார். என் பெயர் ராஜாயி மேக்கப் டெஸ்டுக்காக டைரக்டர் சுப்ரமணியம் சார் அனுப்பினார் என்ற பதிலைக் கேட்டதும் ஹரிபாபுவுக்கு மயக்கமே வரும் போலிருந்தது. நிறமோ கருப்பு, பெயரோ ராஜாயி இவளுக்கா மேக்கப் டெஸ்ட் சுப்ரமணியத்துக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். மூச்சு வாங்கியபடி சுப்ரமணியத்தின் அறைக்குள் நுழைந்தார். நிஜமாகவே இந்தப் பெண்ணுக்கு மேக்கப் போடச் சொல்லுகிறீர்களா எனக் கேட்டார்.

அந்தப் பெண் கருப்பாக இருந்தாலும் கேமரா கோணங்களுக்கு பொருத்தமாக இருப்பாள்.சீக்கிரம் போய் மேக்கப் போட்டு அனுப்புங்கள் என்றார் சுப்ரமணியம். திரும்பி வந்த ஹரிபாபு அரை மனதுடன் ராஜாயிக்கு மேக்கப் போட்டு அனுப்பினார்.

ராஜகுமாரியை பல்வேறு போஸ் களில் படம் எடுத்தார். படங்கள் பிரிண்ட் போட்டு வந்ததும் சுப்ரமணியத்துக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. எதிர்பார்த்தற்கு மேலாகவே அழகாக தோன்றினார் ராஜாகுமாரி. என் படத்தில் நீ நடிக்கிறாய் என்றார். அதைக் கேட்டு மகிழ்ந்தார் ராஜகுமாரி. எதோ தோழி வேடம் கிடைக்கப் போகிறது என்று நினைத்தார். நான் கச்ச தேவயாணி என்ற படம் தயாரிக்கிறேன். அதில் நீதான் கதாநாயகி என்றதும் தான் காண்பதெல்லாம் கனவா அல்லது நனவா என்ற சந்தேகம் ஏற்பட்டது ராஜாகுமாரிக்கு. தன் கண் எதிரே இருந்த புகைப்படங்களைப் பார்த்தார். தன் தோற்றம் அடியோடு மாறி கவர்சிக் கன்னியாக தோன்றுவதைக் கண்டார். உடனே அவர் சுப்ரமணியத்தின் காலில் விழுந்து வணங்கினார். இனி உனக்கு நல்ல காலம்தான். விரைவில் பிரபல நடையாக நீ வருவாய் என்று அவர் வாழ்த்தினார்.  அவர்தான் ராஜாயி என்ற பெயரை ராஜாகுமாரி என்று மாற்றினார்.

ராஜாகுமாரியின் முதல் படமான கச்ச தேவயாணி 41இல் வெளிவந்தது. முதல் 3 நாட்களில் தியேட்டர்களில் கூட்டமே இல்லை. படம் பார்த்தவர்கள் நன்றாக இருக்கிறது. கச்ச தேவயானியாக கச்சைக் கட்டிக்கொண்டு புது நடிகை ராஜாகுமாரி நடிக்கிறார். ஆஹா என்ன அழகு என்று கூற, தியேட்டர்களில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்தது. பிறகு தினமும் ஹவுஸ்புல் தான். தமிழகம் முழுவதும் 25வாரம் ஓடியது. படத்தின் நாயகன் கொத்தமங்கலம் சீனு.

41இல் சூர்யபுத்திரி என்ற படத்தில் ராஜாகுமாரி நடித்தார். இயக்கியவர் பல உன்னதமான படங்களை இயக்கிய அமெரிக்க டைரக்டர் எல்லிஸ் ஆர் டங்கன். படம் சுமாராக ஓடியது.

ஆனால் அடுத்த ஆண்டில் பி யு சின்னப்பாவுடன் ஜோடியாக நடித்த மாடர்ன் தியேட்டர்ஸின் மனோன்மணி சூப்பர் ஹிட் ஆனது. சின்னாப்பா- ராஜாகுமாரி ஜோடிப் பொருத்தம் பிரமாதம் என்று ரசிகர்கள் எண்ணினார்கள். எனவே மீண்டும் அவர்கள் குபேர குலசாவில் நடித்தார்கள். இதில் சின்னப்பா பாடிய நடையலங்காரம் கண்டேன் என்ற பாடல் பிரபலமானது.

43 இல் சிவகவி என்ற மகத்தான வெற்றிப் படத்தில் பாகவதருடன் முதல் முதலாக  நடித்தார் ராஜகுமாரி. ஜோடியாக இல்லாவிட்டாலும் அதற்கு இணையான ராஜநர்த்தகியாக நடித்தார். கலைகளில் சிறந்தது நாட்டியக் கலையே என்று பாகவதர் பாட, ராஜகுமாரி ஆட, ரசிகர்கள் கிறுகிறுத்துப்போனர்கள்.

44 இல் வெளிவந்து தமிழ்ப் பட உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ஹரிதாஸ் படத்தில் பிரபல பாடகி என் சி வசந்தகோகிலம் பாகவதரின் ஜோடியாக நடிக்க , பாகவதரை மயக்கும் தாசி ரம்பாவாக ராஜகுமாரி நடித்தார். மூன்று தீபாவளிகளைத் தாண்டி ஓடி சாதனை நிகழ்த்தியது இந்தப் படம்.  மன்மதலீலையை வென்றார் உண்டோ? என்ற பாடலை பாகவதர் பாடிட ராஜகுமாரி ஆடிய நடனம் பல லட்சம் ரசிகர்களை ராஜகுமாரிக்கு தேடித் தந்தது. காலத்தை வென்ற இப்பாடலை எழுதி இசையமைத்தவர் பாப நாசம் சிவன் என்பது குறிப்பிடத் தக்கது. பிறகு சின்னப்பாவுடன் பங்கஜவல்லி படத்தில் நடித்தார்.

48இல் ராஜகுமாரியின் வாழ்க்கையில் மட்டுமல்ல  தமிழ் திரைப் பட வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க ஆண்டாகும்.  ஜெமினி வாசன் தயாரித்த மிகப் பிரமானடமான சந்திரலேகா என்ற படத்தில் ராஜகுமாரி நடித்தார். அந்தக் காலத்திலேயே 30 லட்சம் செலவில் இந்தப் படத்தை வாசன் தயாரித்திருந்தார். ராஜகுமாரியின் முழுத் திறமையையும்  வெளிப்படுத்திய படம் இது.சர்க்கஸ் காட்சிகளில் ரசிகர்களை கவர்ந்தார். பிரமாண்டமான முரசு நடனத்தில் மின்னல் வேகத்தில் நடனமாடி ரசிகர்களை அசத்தினார்.

சந்திரலேகாவை மொழி மாற்றம் செய்து ஹிந்தியில் திரையிட்டார். தமிழை விட ஹிந்தியில் அதிகம் வசூலானது. சந்திரா என்ற பெயரில் ஆங்கில வர்ணனைகளுடன் அமெரிக்காவில் இதை வெளியிட்டார் வாசன். இப்படத்திற்கென பிரமாண்டமான பேனர்களை பம்பாயில் நிறுத்தி வடஇந்திய திரைப்பட உலகை உலுக்கினார்.

தமிழ் நாட்டின் 5 சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடித்த ஒரே  நடிகை என்ற பெருமை பெற்றவர் ராஜாகுமாரி. பாகவதர், சின்னப்பாவை தொடர்ந்து 3வது சூப்பர் ஸ்டார் ஆனவர் டி ஆர் மகாலிங்கம்.  ஸ்ரீ வள்ளி, நாம் இருவர், ஞான சவுந்தரி மூலம் இந்த அந்தஸ்தை அவர் அடைந்தார். இதய கீதம் என்ற படத்தில் ராஜகுமாரியுடன் ஜோடியாக நடித்தார் மகாலிங்கம். படம் சுமாராகவே ஓடியது. மகாலிங்கத்தை விட ராஜகுமாரி வயதில் பெரியவர் என்பதால் இந்த ஜோடிப் பொருத்தம் பொருந்தவில்லை. 50இல் கே ஆர் ராமசாமியுடன் விஜயகுமாரி, 51இல் சின்னப்பாவுடன் வனசுந்தரி என்ற படத்திலும் நடித்தார் ராஜகுமாரி.

பாகவதர் சிறையிலிருந்து விடுதலை அடைந்து வந்ததும் 52இல் அமரகவி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். விடுதலைக்குப் பின் பாகவதர் நடித்த 5 படங்களில் இதுவே நன்றாக ஓடியது.

சென்னை டி நகரில் தன் பெயரில் ஒரு தியேட்டர் கட்டினார் ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாக முதன் முதலில் தியேட்டர் கட்டியவர் இவர்தான். இதை வாசன் திறந்து வைத்தார்.

தம்பி ராமன்னாவுடன் சேர்ந்து ஆர் ஆர் பிக்சர்ஸ் என்ற படக் கம்பனியை தொடங்கினார். முதல் படம் வாழப் பிறந்தவள். இதில் அவரே நடித்தார். படம் சுமாராக ஓடியது. 54இல் எம் ஜி ஆர்- சிவாஜி இருவரும் இணைந்து நடித்த கூண்டுக்கிளி படத்தை தயாரித்தார். இதில் தனக்கு பொருத்தமான வேடம் இல்லாததால் பி எஸ் சரோஜா, குசல குமாரி இருவரையும் நடிக்க வைத்தார். இரு மாபெரும் நடிகர்கள் நடித்தும் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

இதனால் அவர் துவண்டுவிடவில்லை. குலேபகாவலி என்ற மசாலா படத்தை எடுத்தார். எம் ஜி ஆரை கதானாயனாக்கி அவருக்கு ஜோடியாக நடித்தார். படம் மாபெரும் வெற்றி பெற்று பெரிய வசூலைக் கொடுத்தது.

பாகவதர், சின்னப்பா, மகாலிங்கம், எம் ஜி ஆர் என்ற நான்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடித்த ராஜகுமாரி தங்கப் பதுமை என்ற படத்தில் சிவாஜியுடன் நடித்து 5 சூப்பர் ஸ்டார் களுடன் நடித்த முதல் நடிகை என்ற பெருமை பெற்றார். பின்னர் இந்தப் பெருமையை பானுமதி பெற்றார்.

63இல் வானம்பாடி என்ற படத்தில் ராஜகுமாரி நடித்தார், அதுவே அவரது கடைசிப் படம். அதன் பின் படங்களில் அவர் நடிக்கவில்லை.டி நகர் வீட்டில் அமைதியாக வாழ்ந்தார். பிறகு தன் தியேட்டரை விற்றுவிட்டார். இப்போது அது ஒரு வணிக வளாகமாக இருக்கிறது.

திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த ராஜகுமாரி 20-9-1999 இல் தனது 77 வது வயதில் காலமானார்.தமிழக திரை உலகின் கனவுக் கன்னி மறைந்தாலும் மக்களின் மனதில் இன்னும் கனவுக் கன்னியாகவே வாழ்கிறார்.


1 comment:

  1. மிகவும் சிறப்பான பதிவு. படிக்க நன்றாக இருந்தது.

    ReplyDelete