Wednesday, June 17, 2015

திகில் கதை

இது முழுதும் கற்பனையே. எனது கனவில் கண்ட காட்சி இது.

அந்த போலிஸ் ஸ்டேஷனுக்கு அன்றுதான் மாறுதலாகி பணியில் சேர்ந்திருந்தார் ஆய்வாளர் அமரன். இரவு உதவி ஆய்வாளருடன் ரோந்து சுற்றி வரும்போது ஒரு பஸ் மிக வேகமாக தன்னைத் தாண்டிப் போவதைக் கண்டு விசில் ஊதினார். பஸ் நிற்கவில்லை. உடனே இவர் ஓடிச் சென்று அந்த பஸ்ஸைப் பிடித்து அதில் தவி ஏறினார். என்ன விந்தை!பஸ் சில் ஒருவரும் இல்லை. காலியாக இருந்தது. ஆனாலும் பேச்சுக் குரல்கள் கேட்டன. ஒரு மனிதன் ஏறிவிட்டான் கீழே தள்ளுங்கள் என்ற குரல் ஒலித்தது. இவர் உடனே கீழே தள்ளப்பட்டார்.

கீழே விழுந்தவரை உதவி ஆய்வாளர் எழுப்பி நிற்க வைத்தார். அந்த பஸ் அருகிலிருந்த ஒரு மலையின் மீது ஏறி விழுந்தது. மனிதர்களின் மரண ஓலக் குரல்கள் கேட்டன. பின்பு அமைதியானது. அமரனுக்கு ஒன்றும் புரியவில்லை. இது பற்றி உதவி ஆய்வாளரிடம் விளக்கம் கேட்டபோதுதான் இம்மாதிரி நிகழ்வு சென்ற இரண்டு ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் அந்த பஸ் சில் இருந்தது மனிதர்கள் அல்ல என்றும் விபத்து ஒன்றில் மாண்டுபோனவர்களின் ஆவிகள் என்றும் தெரிந்தது.

அமரன் இதைப் பற்றிய சிந்தனையில் மூழ்கினார். இதற்கொரு முடிவு கட்டவேண்டும் என்று முடிவு செய்தார்.

மறுநாள் பஸ் உரிமையாளருடன் சென்று பள்ளத்தில் கிடந்த பஸ் சை தூக்கி மேலே கொண்டு வந்தார். அதிக சேதம் இல்லையென்றாலும் 5000 வரை செலவு  செய்து பஸ் சை பழைய நிலைக்கு கொண்டு வந்தார்.  பஸ் சின் எண் எம் டி ஒய் 8888 என்பது. இந்த நம்பர் பிளேட்டை என்னுடைய ஜீப்பில் மாற்றுங்கள். என் ஜீப்பின் நம்பரை (எம் டி ஒய் 4000) உங்கள் பஸ் ஸில் மாட்டுங்கள் என்றார் அமரன். அப்படியே செய்யப்பட்டது.

அடுத்த ஆண்டு அந்த நாள் வந்தது. பஸ் திருடப்படவில்லை. பல பேச்சுக் குரல்கள் கேட்டன. என் பஸ் வரவில்லை? என ஆவிகள் எல்லாம் அலைந்தன. 12 மணி அடித்ததும் ஆவிகள் அனைத்தும் ஓலமிட்டபடியே  மலையில் ஏறி கீழே விழுந்தன. காற்றோடு கரைந்து மறைந்தன. அமரன் தனது சாதுர்யத்தால் இதை செய்தார்.

என் சிற்பி

 எனது வாழ்க்கைப் பக்கத்தின் தொடர்ச்சி....

இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு மேலதிகாரியாக இருந்து எனக்கு நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுத்து ஆங்கிலத்தில் அறிக்கைகள் எழுதும் திறமையையும் வளர்த்த ஒரு நல்லவரைப் பற்றி எழுதுவது எனது கடமை என்று எண்ணுகிறேன். அவரைப் பற்றி எழுதாவிட்டால் நான் நன்றி மறந்தவனாவேன். 

அவர் பெயர் ஆர். பசுபதி.அரியலூரில் ரெவென்யூ டிவிஷனல் அதிகாரியாக (ஆர் டி ஒ) பணியாற்றியவர். அவரது அலுவலகத்தில் பணிபுரியும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

நான் எப்போதும் தலை நிமிர்ந்தே நடப்பேன். வேகமாக நடப்பேன். அடிக்க வருவதுபோல வருகிறாயே என்று நண்பர்கள் கூறுவர். கல்லூரியிலிருந்து வேலைக்குச் சென்றதால் அதிகாரிகளிடம் நடந்துகொள்ளும் விதம் தெரியாது. முதலில் ஒருவரைப் பார்க்கும்போது குட் மார்னிங் சொல்லும்படி அறிவுறுத்துவார் பசுபதி.அதிகாரிகளிடம் பேசும்போது நீ அல்லது நீங்கள் என்று சொல்லக்கூடாது என்பார். உதாரணமாக என்னுடன் பேசும்போது ஆர் டி ஒ அப்படி கூறினீர்கள், அதைச் செய்யச் சொன்னீர்கள் என்று கூற வேண்டும். என்ன அவசரமாக இருந்தாலும் நான் மேடையில் அமர்ந்து கோர்ட் நடக்கும்போது குறுக்கே வருவது பைல்களை மேஜையில் வைப்பது கூடாது.  அது கோர்ட்டை அவமதிக்கும் குற்றமாகக் கருதப்படும். கோர்ட்டை முடித்துவிட்டு எனது ஓய்வரைக்குச் சென்ற பின்னரே அங்கு வந்து என்னைப் பார்க்கலாம்.பேசலாம் பைல்களில் ஒப்பம் பெறலாம். இதையெல்லாம் கேட்ட பின்னர்தான் நான் மேலதிகாரிகளுடன் மரியாதையுடன் நடந்துகொள்ளும்  விஷயத்தை அறிந்து கொண்டேன். அதன்படி நடந்தேன்.

அவர்  நன்றாக டென்னிஸ் ஆடுவார். அலுவலகத்தில் உள்ள டென்னிஸ் கோர்ட்டில் சக அதிகாரிகளுடன் விளையாடுவதைப்  பல முறை கண்டிருக்கிறேன்.வீட்டுக்குப் போகும்போது என்னை வீட்டுக்கு வரச் சொல்லுவார். அதே நேரம் தன் வீட்டுக்குச் செல்ல அரசு வாகனத்தை பயன்படுத்தமாட்டார். தனது சைக்கிளிலேயே செல்லுவார். நான் வேகமாக நடப்பதால் அவர் சைக்கிளை  விட்டு இறங்கி முகம் அலம்பும் சமயம் அவர் வீட்டிற்குச் சென்று அமர்ந்துவிடுவேன். சீக்கிரம் வந்திட்டீங்க என்று கூறி வெளியே ஏதாவது சைக்கிள் இருக்கிறதா என்று கேட்பார். நடந்தே வந்துவிட்டேன். எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது என்பேன். இன்றுவரை நான் சைக்கிள் ஒட்டியதே இல்லை. ஒட்டவும் தெரியாது.

அன்றைய பைல்களில்  ஒன்றில் ஆங்கிலத்தில் அறிக்கைகள் எழுதுவார். மற்றொரு பைலை என்னிடம் கொடுத்து இதைப் படித்து  ஆங்கிலத்தில் அறிக்கையை எழுதும்படி கூறுவார். எழுதியவுடன் அதை வாங்கிப் படித்து திருத்தங்கள் செய்து மீண்டும் புதியதாக எழுதச் செய்து ஒப்பமிடுவார். பிறகு இன்றைக்கு இது போதும் நாளைக் காலை 7 மணிக்கு வாருங்கள் மற்ற பைல்களிலும் அறிக்கை எழுதலாம் எனக்கூறி அனுப்பிவிடுவார்.

அப்போது எனக்கு திருமணமாகவில்லை. எனவே நண்பர்களுடன் தங்கியிருந்த ரூமிற்கு சென்று விடுவேன். காலையில் 7 மணிக்கு  வீட்டுக்குச் சென்று மேஜையில் இருக்கும் பைல்களில் அறிக்கை எழுதி அவரின் ஒப்புதலைப் பெறுவேன். பரவாயில்லையே. நான்  திருத்த வேண்டிய அவசியமே இல்லாமல் முழுமையாக எழுதி இருக்கிறீர்களே என்பார். எனக்கு காபி கொடுக்கும்படி கூறிவிட்டு குளிக்கச் சென்று, குளித்துவிட்டு நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு வந்து அமர்வார். குனிந்து கொண்டே இருப்பவர், திடீரென 'நாராயணசாமி ஐயங்கார் வருகிறார்' என்பார்.

அரியலூரில் தாசில்தாரின் மேனேஜராக பணிபுரிந்தவர்தான் நாராயணசாமி ஐயங்கார்.  அவர் வந்ததும்  என்னிடம் இந்த ரிப்போட்டுகள்  எல்லாம் இன்றே பைல் செய்யப்பட்டு கலக்டருக்கு அனுப்பப்பட வேண்டும் என்று கூறி என்னை அனுப்பிவிடுவார்.

அலுவலகம் வந்ததும் தலைமை எழுத்தர் பார்த்துவிட்டு அந்தந்த செக்ஷனுக்கு பைல்களை அனுப்புவார். எனக்கு பைல் வந்ததும் டைபிஸ்ட்டிடம் கொடுத்து டைப் செய்து fair copy for signature என்று எழுதப்பட்ட பேடில் வைத்துவிடுவேன். கையெழுத்தாகி வந்ததும் அன்றைய தபாலிலேயே அறிக்கைகளை கலெக்டருக்கு அனுப்பிவிடுவேன்.

அப்போது ஆர் டி ஓ ஆபீசில் தலைமை எழுத்தராக இருந்தவர் கே வி ராமச்சந்திர ஐயர். உச்சிக் குடுமி வைத்திருப்பார். அவருக்கு நாங்கள் வைத்த பெயர் கழுதை வால் ராமச்சந்திர ஐயர் என்பது. அரசல் புரசலாக அவர் இதைக் கேள்விப்பட்டிருந்தாலும் எங்களை ஒன்றும் செய்வதில்லை. ஆர் டி ஒ எங்களுக்கு வேண்டியவர் என்பது அவருக்குத் தெரியும்.

அலுவலகத்தில் 2வது கிளார்க்காக இருந்தவர் சுகவனம் என்பவர்.மிக நல்லவர், அனைவரிடமும் அன்பாக பழகுவார்,பேசுவார், தெரியாததைக் கேட்டால் சொல்லித்தருவார். அப்போது நான் ரெவின்யூ டெஸ்ட் 1,2,3 பாஸ் செய்திருந்தேன். சர்வே டிரைனிங் போது என் பெயர் சேர்க்கப்பட்டு கலெக்டரிடம் இருந்து உத்தரவு வந்திருந்தது. அதில் என் பெயரை அடிக்கோடிட்டு congratulation என்று எழுதி அனுப்பினார். உடனே டிரைனிங்கில் சேர பணியிலிருந்து என்னை விடுவித்தார். இன்று ஆங்கிலத்தில் நன்றாக என்னால் எழுத முடிகிறது என்றால் அது பசுபதி அவர்களிடம் நான் கற்ற பாடமே காரணம். அந்த நல்லவர் வல்லவரிடம் பணியாற்றும் பேறு கிடைத்ததை பெருமையாக எண்ணுகிறேன்.

வாழ்க்கைப் பக்கம்

எனது வாழ்வில் பணியாற்றிய காலத்தில் நடந்த நிகழ்வு ஒன்றை சொல்லிவிட விரும்புகிறேன். பைபிளின் 1 சாமுவேல் 18 முதல்  21 வரை படித்தபோது எனது வாழ்விலும் இதே போன்றதொரு நிகழ்வு நடந்தது நினைவுக்கு வந்தது.

சவுலும் தாவீதும் போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தபோது  பெண்கள் ஆடிப்பாடி வரவேற்றனர். சவுல் கொன்றது ஆயிரம் தாவீது கொன்றதோ பதினாறாயிரம் என்று பாடியதைக் கேட்ட சவுல் தனக்கு கீழ் பணி செய்பவனை தனக்கு மேலாக புகழ்வதை விரும்பவில்லை. தாவீதின் மீது காய்மகாரம் கொண்டான். அந்த நாள் முதல் சவுல் தாவீதை காய்மகாரமாக பார்த்தான்  என சாமுவேல் 1;18-21 கூறுகிறது.

அப்போது நான் அகதிகள் மறுவாழ்வு தனி துணை தாசில்தாராக அந்த மாவட்டத்தில் பனி புரிந்துவந்தேன். பற்பல இடங்களில் வாழ்ந்து வந்த அகதிகளை ஒரே இடத்தில் வாழும்படி செய்வதற்காக ஆலங்குடியில் இருந்த ஒரு முஸ்லீம் செல்வந்தரிடம் அனுமதி பெற்று அவருக்கு சொந்தமான இடத்தில் 5 ஏக்கரை இனாமாக அவரிடமிருந்து பெற்றேன். அதில் ஏறத்தாழ 50 குடிசைகளை அமைத்து அகதிகள் குடிவந்தனர்.

வீடுகளை திறந்து வைக்க அகதிகள் மாவட்ட ஆட்சியரை அழைத்திருந்தனர்.அவரும் வந்து குடிசைகளை திறந்துவைத்துவிட்டு மேடையில் வந்து அமர்ந்தார். அந்த இடத்திலேயே 50 வீடுகளை பஞ்சாயத்து யூனியனில்  இருந்து கட்டித்தர உத்தரவு கொடுகுமாறு கோரிக்கை வைத்தனர். அப்படியே செய்வதாக ஆட்சியர் உறுதிமொழி அளித்தார்.

அப்போது அகதிகள்  நான் தடுத்தும் என்னை கேளாமல் மேடை மீது ஏறி "இவர் எங்கள் தாசில்தார். இந்த இடத்தை இலவசமாக வாங்கித் தந்து எங்களை வாழவைத்தவர்" என்று கூறி எனக்கு மாலை அணிவித்தனர்.  அப்போது ஆட்சியர் என்னைப் பார்த்த பார்வையில் காய்மகார உணர்வை நான் கண்டேன். இதனால் அவரால் எனக்கு பல இடைஞ்சல்கள் ஏற்பட்டன. அவர் மாறுதலாகிச் செல்லும் போது கூட அந்த நிகழ்விலும் நான் கலந்துகொள்ளவில்லை.

இந்த சந்தர்ப்பத்தில்  எனது பணிக்கால ஆரம்பத்தில் நான் ஜெயங்கொண்டம்  தாலுகாவில் பணியாற்றிவந்தேன்.  இயற்கையிலேயே தமிழார்வம் கொண்டவன் நான். அண்ணாவின் பேச்சுகளைக் கேட்கத் தவறுவதில்லை. அவரது புத்தகங்களையும் படித்து இருக்கிறேன்.  ஜெயங்கொண்டம் வருவாய்த் துறை சங்க ஆண்டுவிழாவில் புத்தகம் வெளியிடப்பட்டது. அதில் வாழ்க்கை வாழ்வதற்கே  என்ற கட்டுரையை எழுதியிருந்தேன். புரட்சிக் கருத்துக்கள் நிறைந்திருந்தது. பலராலும் பாராட்டப்பட்டது.

இதே சமயத்தில் வேறொரு தாலுக்காவில் நடந்த சங்க ஆண்டுவிழா மலருக்காக கட்டுரை ஒன்றை எழுதி அனுப்பியிருந்தேன்.  சங்கத்தின் மூலமாக வராத காரணத்தினால் கட்டுரையை வெளியிடாது அப்படியே திருப்பி அனுப்பிவிட்டனர்.கட்டுரை  கிடைத்ததும் சங்கத் தலைவரும் செயலாளரும் என்னைக் கூப்பிட்டு கண்டித்தனர். இனி இவ்வாறு எல்லாம் எழுதாதே என்று அறிவுரை கூறினார்கள். உனது கட்டுரையைப் படித்தோம். அனல் பறக்கிறது. நீ எழுத்தாளராக ஆகியிருந்தால் மிகப் பிரபலமாகியிருப்பாய். இப்படி தாலுகா ஆபீஸ் குமாஸ்தாவாக இருக்கவேண்டும் என்பது உனது தலைவிதி போலும் என்று கூறினார்கள். அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு அன்றுடன் எனது எழுத்தார்வதிற்கு அணை போட்டுவிட்டேன்.

ஜாதி மத பேதத்தால் வாழ்வில் ஒன்றுபடமுடியாத காதலர்கள் சாவில் ஒன்று படுவதை மையமாக்கி சாவின் அணைப்பு என்ற எனது முதல் கதையை எழுதினேன். கதை திரை முழக்கம் என்ற பத்திரிகையில் வெளியாகியது. அடுத்ததாக  தாசி குலத்தை சேர்ந்த பெண்ணை மணந்ததின் காரணமாக சமுதாயத்தில் ஒருவனுக்கு ஏற்பட்ட இழிவுகளை மையமாக்கி  விஷ கன்னிகை என்ற கதையை எழுதினேன். அதுவும் பிரசுரமாயிற்று.  பின்பு  விபச்சாரிகளின் அலங்கோலத்தை மையமாக்கி வண்டுகளைத் தேடும் மலர்கள் என்ற கதையை எழுதினேன். அதுவும் வெளியானது. பிறகு ஒரு நீதிபதியின் வாழ்வில் நடந்த நிகழ்வை வைத்து நீதிக்கு மரியாதை என்ற கதையை எழுதினேன். அதுவும் பிரசுரமாயிற்று.

.............................தொடரும்..................
Sunday, June 14, 2015

டி ஆர் ராஜகுமாரி -தமிழ்த் திரையின் முதல் கனவுக் கன்னி

பாதச் சுவடுகளில் புகு முன் இறைவணக்கம்.
1.உன் நிழலில் நான் வாழ்வதற்கு ஆசை கொண்டேன் இறைவா, என் நிழலில் உன்னைக் காண்பதற்கு நாளும் உன்னைத் தேடுகின்றேன்.
2.மின்னும் வின்மீன்கள் கத்தும் கடலலைகள்
வீசிடும் தென்றல் பேசிடும் பறவைகள்
மண்ணும் மாமலைகள் வான்முட்டும் நெடு மரங்கள்
காசினியில் உன் நிழலென இவைகளில் தேடியும் காண்கிலேன்.
3.உன் நிழலில் என் நிழல் மறைந்திருக்கின்றதென்ற
உன் குரலைக் கேட்டபின் உண்மை உணர்ந்தேன்.
என் நிழலில் உன் நிழலைக் கண்டுகொண்டேன் இறைவா
உன் நிழலில்  என்றும் நான் இனி வாழ்ந்திடுவேன்.

இனி பதிவு.


டி ஆர் ராஜகுமாரி.

தமிழ்த் திரைப் பட உலகின் முதல் கனவுக்கன்னி நேரு பெயர் பெற்ற கருப்பழகி டி ஆர் ராஜகுமாரிஉயின் வாழ்கையின் நிகழ்வுகளை எழுத முயல்கின்றேன்.

தஞ்சையில் ஒரு கலை குடும்பத்தில் 1922இல் பிறந்தார். பெயர் ராஜாயி என்பது. ராஜகுமாரியின் அத்தை எஸ் பி எல் தனலெட்சுமி சினிமாவில் நடித்து வந்தார். 46இல் நாதஸ்வர சக்கரவர்த்தி டி என் ராஜரத்தினம் பிள்ளை நடித்த காளமேகம் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க தனலட்சுமி ஒப்பந்தமானார். அவர் சென்னைக்கு படப்பிடிப்புக்குச் செல்லும் போது ராஜாகுமாரியும் உடன் சென்றார்.

சென்னையில் தங்கியிருந்த தனலட்சுமியை ஒரு படத்திற்கு ஒப்பந்தம் செய்வதற்கு டைரக்டர் கே சுப்ரமணியம் வந்திருந்தார்.எம் கே தியாகராஜ பாகவதரையும் எம் எஸ் சுப்புலட்சுமியையும்  திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தான்,

தனலட்சுமியிடம் சுப்ரமணியம் பேசிக்கொண்டிருந்த பொழுது ஒரு பெண் காபி கொண்டுவந்து கொடுத்தாள். கருப்பு நிறம். வேலைக்காரியோ என எண்ணும் உருவம். யார் இந்தப் பெண் என்று விசாரித்தார். என் சொந்தக்காரப் பெண் உதவிக்கு வந்திருக்கிறாள் என்றார் தனலட்சுமி.

நாளைக்கு இவளை ஸ்டூடியோவுக்கு அழைத்துவாருங்கள். மேக் அப் டெஸ்ட் போட்டுப் பார்ப்போம் என்று சொல்லி விட்டுச் சென்றார்.

மறுநாள் ராஜகுமாரி ஸ்டூடியோவுக்குச் சென்றார். அக்காலத்தில் புகழ் பெற்ற மேக் அப் மேன் ஹரி பாபு வுக்கு போன் செய்து ஒரு பெண்ணை அனுப்புகிறேன் மேக் அப் போட்டு அனுப்புங்கள் என்றார்.

மேக்கப் போடுவதற்கு காத்திருந்த ஹரிபாபு கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த பெண்ணைப் பார்த்து மிரண்டு போனார். யாரம்மா நீ என்று விசாரித்தார். என் பெயர் ராஜாயி மேக்கப் டெஸ்டுக்காக டைரக்டர் சுப்ரமணியம் சார் அனுப்பினார் என்ற பதிலைக் கேட்டதும் ஹரிபாபுவுக்கு மயக்கமே வரும் போலிருந்தது. நிறமோ கருப்பு, பெயரோ ராஜாயி இவளுக்கா மேக்கப் டெஸ்ட் சுப்ரமணியத்துக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். மூச்சு வாங்கியபடி சுப்ரமணியத்தின் அறைக்குள் நுழைந்தார். நிஜமாகவே இந்தப் பெண்ணுக்கு மேக்கப் போடச் சொல்லுகிறீர்களா எனக் கேட்டார்.

அந்தப் பெண் கருப்பாக இருந்தாலும் கேமரா கோணங்களுக்கு பொருத்தமாக இருப்பாள்.சீக்கிரம் போய் மேக்கப் போட்டு அனுப்புங்கள் என்றார் சுப்ரமணியம். திரும்பி வந்த ஹரிபாபு அரை மனதுடன் ராஜாயிக்கு மேக்கப் போட்டு அனுப்பினார்.

ராஜகுமாரியை பல்வேறு போஸ் களில் படம் எடுத்தார். படங்கள் பிரிண்ட் போட்டு வந்ததும் சுப்ரமணியத்துக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. எதிர்பார்த்தற்கு மேலாகவே அழகாக தோன்றினார் ராஜாகுமாரி. என் படத்தில் நீ நடிக்கிறாய் என்றார். அதைக் கேட்டு மகிழ்ந்தார் ராஜகுமாரி. எதோ தோழி வேடம் கிடைக்கப் போகிறது என்று நினைத்தார். நான் கச்ச தேவயாணி என்ற படம் தயாரிக்கிறேன். அதில் நீதான் கதாநாயகி என்றதும் தான் காண்பதெல்லாம் கனவா அல்லது நனவா என்ற சந்தேகம் ஏற்பட்டது ராஜாகுமாரிக்கு. தன் கண் எதிரே இருந்த புகைப்படங்களைப் பார்த்தார். தன் தோற்றம் அடியோடு மாறி கவர்சிக் கன்னியாக தோன்றுவதைக் கண்டார். உடனே அவர் சுப்ரமணியத்தின் காலில் விழுந்து வணங்கினார். இனி உனக்கு நல்ல காலம்தான். விரைவில் பிரபல நடையாக நீ வருவாய் என்று அவர் வாழ்த்தினார்.  அவர்தான் ராஜாயி என்ற பெயரை ராஜாகுமாரி என்று மாற்றினார்.

ராஜாகுமாரியின் முதல் படமான கச்ச தேவயாணி 41இல் வெளிவந்தது. முதல் 3 நாட்களில் தியேட்டர்களில் கூட்டமே இல்லை. படம் பார்த்தவர்கள் நன்றாக இருக்கிறது. கச்ச தேவயானியாக கச்சைக் கட்டிக்கொண்டு புது நடிகை ராஜாகுமாரி நடிக்கிறார். ஆஹா என்ன அழகு என்று கூற, தியேட்டர்களில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்தது. பிறகு தினமும் ஹவுஸ்புல் தான். தமிழகம் முழுவதும் 25வாரம் ஓடியது. படத்தின் நாயகன் கொத்தமங்கலம் சீனு.

41இல் சூர்யபுத்திரி என்ற படத்தில் ராஜாகுமாரி நடித்தார். இயக்கியவர் பல உன்னதமான படங்களை இயக்கிய அமெரிக்க டைரக்டர் எல்லிஸ் ஆர் டங்கன். படம் சுமாராக ஓடியது.

ஆனால் அடுத்த ஆண்டில் பி யு சின்னப்பாவுடன் ஜோடியாக நடித்த மாடர்ன் தியேட்டர்ஸின் மனோன்மணி சூப்பர் ஹிட் ஆனது. சின்னாப்பா- ராஜாகுமாரி ஜோடிப் பொருத்தம் பிரமாதம் என்று ரசிகர்கள் எண்ணினார்கள். எனவே மீண்டும் அவர்கள் குபேர குலசாவில் நடித்தார்கள். இதில் சின்னப்பா பாடிய நடையலங்காரம் கண்டேன் என்ற பாடல் பிரபலமானது.

43 இல் சிவகவி என்ற மகத்தான வெற்றிப் படத்தில் பாகவதருடன் முதல் முதலாக  நடித்தார் ராஜகுமாரி. ஜோடியாக இல்லாவிட்டாலும் அதற்கு இணையான ராஜநர்த்தகியாக நடித்தார். கலைகளில் சிறந்தது நாட்டியக் கலையே என்று பாகவதர் பாட, ராஜகுமாரி ஆட, ரசிகர்கள் கிறுகிறுத்துப்போனர்கள்.

44 இல் வெளிவந்து தமிழ்ப் பட உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ஹரிதாஸ் படத்தில் பிரபல பாடகி என் சி வசந்தகோகிலம் பாகவதரின் ஜோடியாக நடிக்க , பாகவதரை மயக்கும் தாசி ரம்பாவாக ராஜகுமாரி நடித்தார். மூன்று தீபாவளிகளைத் தாண்டி ஓடி சாதனை நிகழ்த்தியது இந்தப் படம்.  மன்மதலீலையை வென்றார் உண்டோ? என்ற பாடலை பாகவதர் பாடிட ராஜகுமாரி ஆடிய நடனம் பல லட்சம் ரசிகர்களை ராஜகுமாரிக்கு தேடித் தந்தது. காலத்தை வென்ற இப்பாடலை எழுதி இசையமைத்தவர் பாப நாசம் சிவன் என்பது குறிப்பிடத் தக்கது. பிறகு சின்னப்பாவுடன் பங்கஜவல்லி படத்தில் நடித்தார்.

48இல் ராஜகுமாரியின் வாழ்க்கையில் மட்டுமல்ல  தமிழ் திரைப் பட வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க ஆண்டாகும்.  ஜெமினி வாசன் தயாரித்த மிகப் பிரமானடமான சந்திரலேகா என்ற படத்தில் ராஜகுமாரி நடித்தார். அந்தக் காலத்திலேயே 30 லட்சம் செலவில் இந்தப் படத்தை வாசன் தயாரித்திருந்தார். ராஜகுமாரியின் முழுத் திறமையையும்  வெளிப்படுத்திய படம் இது.சர்க்கஸ் காட்சிகளில் ரசிகர்களை கவர்ந்தார். பிரமாண்டமான முரசு நடனத்தில் மின்னல் வேகத்தில் நடனமாடி ரசிகர்களை அசத்தினார்.

சந்திரலேகாவை மொழி மாற்றம் செய்து ஹிந்தியில் திரையிட்டார். தமிழை விட ஹிந்தியில் அதிகம் வசூலானது. சந்திரா என்ற பெயரில் ஆங்கில வர்ணனைகளுடன் அமெரிக்காவில் இதை வெளியிட்டார் வாசன். இப்படத்திற்கென பிரமாண்டமான பேனர்களை பம்பாயில் நிறுத்தி வடஇந்திய திரைப்பட உலகை உலுக்கினார்.

தமிழ் நாட்டின் 5 சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடித்த ஒரே  நடிகை என்ற பெருமை பெற்றவர் ராஜாகுமாரி. பாகவதர், சின்னப்பாவை தொடர்ந்து 3வது சூப்பர் ஸ்டார் ஆனவர் டி ஆர் மகாலிங்கம்.  ஸ்ரீ வள்ளி, நாம் இருவர், ஞான சவுந்தரி மூலம் இந்த அந்தஸ்தை அவர் அடைந்தார். இதய கீதம் என்ற படத்தில் ராஜகுமாரியுடன் ஜோடியாக நடித்தார் மகாலிங்கம். படம் சுமாராகவே ஓடியது. மகாலிங்கத்தை விட ராஜகுமாரி வயதில் பெரியவர் என்பதால் இந்த ஜோடிப் பொருத்தம் பொருந்தவில்லை. 50இல் கே ஆர் ராமசாமியுடன் விஜயகுமாரி, 51இல் சின்னப்பாவுடன் வனசுந்தரி என்ற படத்திலும் நடித்தார் ராஜகுமாரி.

பாகவதர் சிறையிலிருந்து விடுதலை அடைந்து வந்ததும் 52இல் அமரகவி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். விடுதலைக்குப் பின் பாகவதர் நடித்த 5 படங்களில் இதுவே நன்றாக ஓடியது.

சென்னை டி நகரில் தன் பெயரில் ஒரு தியேட்டர் கட்டினார் ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாக முதன் முதலில் தியேட்டர் கட்டியவர் இவர்தான். இதை வாசன் திறந்து வைத்தார்.

தம்பி ராமன்னாவுடன் சேர்ந்து ஆர் ஆர் பிக்சர்ஸ் என்ற படக் கம்பனியை தொடங்கினார். முதல் படம் வாழப் பிறந்தவள். இதில் அவரே நடித்தார். படம் சுமாராக ஓடியது. 54இல் எம் ஜி ஆர்- சிவாஜி இருவரும் இணைந்து நடித்த கூண்டுக்கிளி படத்தை தயாரித்தார். இதில் தனக்கு பொருத்தமான வேடம் இல்லாததால் பி எஸ் சரோஜா, குசல குமாரி இருவரையும் நடிக்க வைத்தார். இரு மாபெரும் நடிகர்கள் நடித்தும் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

இதனால் அவர் துவண்டுவிடவில்லை. குலேபகாவலி என்ற மசாலா படத்தை எடுத்தார். எம் ஜி ஆரை கதானாயனாக்கி அவருக்கு ஜோடியாக நடித்தார். படம் மாபெரும் வெற்றி பெற்று பெரிய வசூலைக் கொடுத்தது.

பாகவதர், சின்னப்பா, மகாலிங்கம், எம் ஜி ஆர் என்ற நான்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடித்த ராஜகுமாரி தங்கப் பதுமை என்ற படத்தில் சிவாஜியுடன் நடித்து 5 சூப்பர் ஸ்டார் களுடன் நடித்த முதல் நடிகை என்ற பெருமை பெற்றார். பின்னர் இந்தப் பெருமையை பானுமதி பெற்றார்.

63இல் வானம்பாடி என்ற படத்தில் ராஜகுமாரி நடித்தார், அதுவே அவரது கடைசிப் படம். அதன் பின் படங்களில் அவர் நடிக்கவில்லை.டி நகர் வீட்டில் அமைதியாக வாழ்ந்தார். பிறகு தன் தியேட்டரை விற்றுவிட்டார். இப்போது அது ஒரு வணிக வளாகமாக இருக்கிறது.

திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த ராஜகுமாரி 20-9-1999 இல் தனது 77 வது வயதில் காலமானார்.தமிழக திரை உலகின் கனவுக் கன்னி மறைந்தாலும் மக்களின் மனதில் இன்னும் கனவுக் கன்னியாகவே வாழ்கிறார்.