Wednesday, October 21, 2015

எம் ஜி ஆர் ஒரு சகாப்தம் 2.

1941 இல் பாகவதரோடு நடிக்கும் பாக்கியம் எம்ஜிஆருக்கு அசோக் குமார் என்ற படத்தில்  கிடைத்தது. எம்ஜிஆரின் ஆரம்பகாலப் படங்களில் அசோக் குமார் குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து தமிழறியும் பெருமாள், தாசிப் பெண், ஹரிச்சந்திரா, மீரா  ஆகிய படங்களில் நடித்தார். பின்னணி பாடும் முறை இல்லாத காலகட்டம் அது. சொந்தக்குரலில் பாடத்தெரிந்தவர்கள்  மட்டுமே கதாநாயகனாக நடிக்க முடியும் என்ற நிலை. அழகும் திறமையும் உள்ள எம்ஜிஆரால் கதாநாயகனாக உயர முடியாமல் போனதற்கு அதுதான் காரணம். ஏனெனில் எம்ஜிஆருக்குப் பாடத் தெரியாது.
46இல் பின்னணி பாடும் முறை வந்தது.எம்ஜிஆர் வாழ்க்கையிலும் திருப்பு முனை ஏற்பட்டது. 47 இந்தியாவுக்கு மட்டுமல்லாது எம்ஜிஆருக்கும் முக்கியமான ஆண்டாக இருந்தது.47 இல் ஏப்ரல் 11 இல் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த ராஜ குமாரி படம் வெளியானது. (36 இல் அவருக்கு முதல் படம் சதிலீலாவதி. 11 வருடங்கள் கழித்துதான் அவரால் கதாநாயகனாக வர முடிந்தது) திடீரெனெ எப்படி அவருக்கு இந்த அந்தஸ்து கிடைத்தது  சுவாரஸ்யமானது.
ஸ்ரீ முருகன் என்ற படத்தில் எம்ஜிஆர் பரமசிவன் வேடத்தில் நடித்தார். அவரும் பார்வதி வேடத்தில் நடித்த மாலதியும் ஆடிய தாண்டவம் ஆட்டம் ரசிகர்களைக் கவர்ந்தது. இந்தப் படத்திற்கு ஏ  எஸ் ஏ சாமி வசனம் எழுதினார். இருவரும் நண்பர்களானார்கள். இதை அடுத்து ராஜகுமாரி என்ற படத்தை அதே ஜூபிடர் நிறுவனம் எடுக்க திட்டமிட்டது. இதற்கு சாமி கதை வசனம் மேலும் இயக்குனர் பொறுப்பும் ஏற்றார். படத்திற்கு பி யு சின்னப்பா நாயகனாகவும் டி ஆர் ராஜகுராரி நாயகியாகவும் நடிக்க ஏற்பாடானது. ஆனால் சாமி எம்ஜிஆர் மற்றும் மாலதியை வைத்தே படத்தை எடுக்கலாம் என்று விருப்பம் தெரிவித்தார்.  பெரிய நடிகர்களை வைத்து எடுத்தால் வெற்றி நிச்சயம் இதுபோன்று சிறு நடிகர்கள் நடித்தால் படம் தேறாது என்று சொல்லி முதலில் மறுத்த ஜூபிடர் நிறுவனம்  பின்னர் சாமியின் பிடிவாதத்தைக் கண்டு அவர் போக்கிலேயே விட்டுவிட ராஜகுமாரியில் எம்ஜிஆர் நாயகனானார்.
சாமி  எம்ஜிஆர் மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. எம்ஜிஆரும் டி எஸ் பாலையாவும் போடும் கத்திச் சண்டை பிரமாதமாக இருந்தது. இதில் எம்ஜிஆருக்குப் பின்னணி பாடியவர் எம் எம் மாரியப்பா. இதில்தான் நம்பியார் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். படத்தில் எம்ஜிஆர் பெயர் எம்ஜி ராமச்சந்தர் என்று போடப்பட்டது. படம் பெரிய வெற்றி அடைந்தது. மக்கள் மத்தியில் எம்ஜிஆர் பிரபலமானார்.
சிறையில் இருந்து பாகவதர் வெளிவந்தபின் ராஜ முக்தி என்ற படத்தை தயாரித்தார். இதல் வி என் ஜானகி பாகவதரின் ஜோடியாக நடித்தார். பாகவதருக்கு அடுத்த தளபதி வேடத்தில் எம்ஜிஆர் நடித்தார். வில்லி ரோலில் பானுமதி நடித்தார். அவருக்கு முதல் தமிழ் படம் இதுதான். இந்தப் படதின்போதுதான் எம்ஜிஆரும் ஜானகியும் சந்தித்து பேசிக்கொண்டனர்.  எம்ஜிஆரின் முதல் மனைவி பார்கவி போலவே ஜானகி தோற்றமளித்தார். எனவே எம்ஜிஆருக்கு அவர் மீது காதல் உண்டானது. இருவரும் நெருங்கிப் பழகினார்கள். அப்போது எம்ஜிஆரை விட ஜானகி அதிக பிரபலமாக இருந்தார்.
தன் இரண்டாம் மனைவி சதானந்தவதியின் ஒப்புதலுடன் எம்ஜிஆர் ஜானகியை மணந்து கொண்டார். பாகவதர் படங்களுக்கு இசை யமைத்த பாபநாசம் சிவனின் அண்ணன் ராஜகோபால ஐய்யரின் மகள்தான் ஜானகி என்பது குறிப்பிடத்தக்கது.

----------தொடரும்------------Thursday, October 15, 2015

எம் ஜி ஆர் ஒரு சகாப்தம் 1.

"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்" என்று அன்று பாடிய திரை உலகிலும் அரசியலிலும் சாதனைகள் புரிந்த எம் ஜி ஆர் என்ற மூன்றேழுத்து மாமனிதரின் வாழ்க்கையின் நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டுவருவோம். 
தமிழ் உலகின் சூப்பர் ஸ்டாராகவும் தமிழக முதல்வராகவும் திகழ்ந்த எம் ஜி ஆர் திரை உலகில் காலடி எடுத்து வைத்த பின் கதாநாயகன் அந்தஸ்தை எட்டிப்பிடிக்க 11 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. அவர் முழுப் பெயர் எம் ஜி ராமச்சந்திரன். பெற்றோர் கோபால மேனன் சத்தியபாமா. கோபாலமேனன் அரூர் எர்ணா குளம் திருச்சூர் ஆகிய இடங்களில் மேஜிஸ்ட்ரேட் ஆக பணிபுரிந்து வந்தார். நீதி தவறாத நீதிபதியாக அநீதிக்கு துணை போக மறுத்தார். அவரை வேறு ஊர்களுக்கு அடிக்கடி மாற்றினார்கள். அதனால் மனவேதனை அடைந்து தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மனைவியுடன் இலங்கை சென்றார்.இவர் இலங்கையில் வசித்தபோது கண்டியிலிருந்து  3 கீ மி தூரத்தில் உள்ள ஹந்தானா என்ற இடத்தில் 1917, ஜனவரி 17ம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் எம் ஜி ஆர் பிறந்தார்.  அந்த இடம் தமிழில் பச்சைக் காடு என்று அழைக்கப்படுகிறது. எம் ஜி ஆர்  பிறந்த இடம் தற்போது ஒரு பள்ளிக்கூடமாக இருக்கிறது.
எம் ஜி ஆர்க்கு சக்ரபாணி பாலகிருஷ்ணன் என்ற 2 அண்ணன்கள் கமலாட்சி சுபத்திரா என்ற தமக்கைகள். 4 குழந்தைகளுக்குப் பின்  கடைக் குட்டியாக பிறந்தவர்தான் எம்ஜிஆர்.பாலகிருஷ்ணன் கமலாட்சி, சுபத்திரா மூவரும் சிறு வயதிலேயே இறந்து விட்டனர். சக்ரபாணியையும் எம்ஜிஆர் ரையும் அன்புடன் வளர்த்தனர். எம்ஜிஆர் ருக்கு இரண்டரை வயதானபோது குடும்பத்துடன் தாயகம் திரும்பினர். முன்பு செல்வச் செழிப்புடன் வாழ்ந்த குடும்பம் ஒத்தப் பாலம் என்ற இடத்தில் வாடகை வீட்டில் வசித்தது.
1920 இல் எம்ஜிஆரின் 3ம் வயதில் கோபாலமேனன் திடீரென்று மாரடைப்பால் காலமானார். இரண்டு மகன்களையும் ஆளாக்கும் பொறுப்பு சத்தியா அம்மையாரின் தலையில் விழுந்தது. அவரது தம்பி நாராயணனும் குடும்ப நண்பர் வேலு நாயரும் கும்பகோணத்தில் வசித்து வந்தனர். குழந்தைகளுடன் அங்கு சென்றார் சத்திய பாமா.
நாராயணன் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி என்ற நாடக குழுவில் பின் பாட்டுப் பாடிவந்தார்.இலங்கையிலிருந்து கொண்டு வந்த பணம், நகை தீரும்  வரை அன்றாட வாழ்க்கை சிரமமின்றி கழிந்தது. அதன் பின் குழந்தைகளை வளர்க்க அரும்பாடு பட்டார் சத்தியபாமா. குடும்ப கஷ்டத்தை போக்க நாராயணன் ஒரு யோசனை கூறினார். சக்ரபானியும் எம்ஜிஆரும் பார்க்க அழகாக இருப்பதால் தான் வேலை பார்க்கும் நாடகக் கம்பெனியில் சேர்ந்தால் விரைவில் முன்னுக்கு வரலாம் என்று சொன்னார். குடும்ப சூழ்நிலையை உத்தேசித்து சத்தியபாமா இதற்கு சம்மதித்தார்.
அதன் படி இருவரும் கம்பெனியில் சேர்க்கப்பட்டனர். அங்கேதான் பி யு சின்னப்பா, டி எஸ் பாலையா ஆகியோர் நடிகர்களாக இருந்தனர். 1935 இல் எஸ் எஸ் வாசன் எழுதிய சதிலீலாவதி என்ற கதை படமாக உருவானது. அதில் ஒரு போலிஸ் வேடத்தில் எம்ஜிஆர் நடித்தார். அப்போது அவருக்கு வயது 19. கிடைத்த சம்பளமோ 100. அதை அப்படியே அம்மாவிடம் கொடுத்து ஆசிபெற்றார். இதுவே அவரது முதல் படம். இரண்டாவது படம் இரு சகோதரர்கள். இதில் சக்ரபானியும் நடித்தார். படம் நன்றாக ஓடியது.
தொடர்ந்து சிறு வேடங்களில் நடித்துவந்த எம்ஜிஆர்க்கு திருமணம் செய்ய சத்தியபாமா விரும்பினார். நடிப்புத் துறையில் முன்னேறிய பிறகே திருமணம் என்று எம்ஜிஆர் மறுத்தாலும் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற அதற்கு சம்மதித்தார். பாலக்காட்டைச் சேர்ந்த பார்கவி என்ற தங்கமணியை திருமணம் செய்தார். துரதிஷ்ட வசமாக பார்கவி சில ஆண்டுகளிலேயே மரணித்தார். மனைவியின் மரணம் எம்ஜிஆரை மிகவும் பாதித்தது. ஒரு துறவி போல வாழ்ந்தார். மகனின் நிலை கண்டு வருந்திய தாய் அவருக்கு மறுமணம் செய்ய விரும்பி மறுமணத்தின் கட்டாயத்தை எடுத்துரைத்து எம்ஜிஆரை சம்மதிக்க வைத்தார். அப்படி இரண்டாம் மனைவியாக வந்தர்வர்தான் சதானந்தவதி. அவர் கர்ப்பம் ஆனபோது அவருக்கு காசநோய் பிடித்தது. அப்படியே விட்டால் உயிருக்கு ஆபத்து என்று அவருடைய கர்ப்பப்பையை அகற்றினார்கள் மருத்துவர்கள்.  47 இல் எம்ஜிஆரின் தாய் காலமானார். அந்தத் துயரத்திலிருந்து எம்ஜிஆர் மீள வெகு காலம் பிடித்தது.
49 ஆம் ஆண்டில் உடல் நலம் குன்றிய சதானந்தவதி  படுத்த படுக்கையானார். அவர் இறக்கும் வரை மாத்திரை களுடனே ஒரு நோயாளியாகவே வாழ்ந்தார். அவரை எம்ஜிஆர் கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார். இருந்தும் அவர் ஒரு இல்லற துறவியாகவே வாழ்ந்துவந்தார்.
சோதனைகள் பல இருந்தாலும் திரைத் துறையில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்தார்.

......தொடரும்...