Saturday, March 14, 2015

பி யு சின்னப்பா


தனது இனிய பாடல்களினால் பாகவதர் புகழ்பெற்றது போல திரு பி யு சின்னப்பாவும் தன் வசனம் பேசும் திறமையினாலும் நடிப்பினாலும் பாகவதருக்கு சமமான இடத்தைப் பெற்றார். தமிழக திரையுலக ரசிகர்கள் பாகவதர், சின்னப்பா இருவருக்கும் தனித்தனியே ஏற்பட்டனர்.


ஜுபிடர் நிறுவனம் தயாரித்த சவுக்கடி சந்திரகாந்தா என்ற படத்தில் சுண்டூர்  இளவரசன் என்ற கதாபாத்திரமாக சின்னப்பா நடித்தார். படம் 1936இல்  வெளிவந்தது. நன்றாக ஓடியது. சின்னப்பாஉவுகு நடிகர் அந்தஸ்து கிடைத்தது. சின்னப்பாவின் தந்தை உலக நாகபிள்ளை நாடக நடிகர். திருவிழாக்களில் நாடகங்கள் நடத்துவதில் புகழ் பெற்றவர். அவரது நடிப்புத்திறன் சின்னப்பாவிடம் நிறைந்து இருந்தது.சின்னப்பாவை விட எம் ஜி ஆர் ஒரு வயது இளையவர். சின்னப்பா கதாநாயகனாக நாடகத்தில் நடித்துகொண்டிருந்தபோது எம் ஜி ஆர் அதில் பெண் வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது இன்றைய தலை,முறையினரால் நம்ப முடியாதது என்றாலும் அதுதான் உண்மை.இதைத் தொடர்ந்து சின்னப்பா 1937,38,39 களில் ராஜமோகன், பஞ்சாப் கேசரி, அனாதைப் பெண், யயாதி, மாத்ரு பூமி, என்ற படங்களில் நடித்தார். படங்கள் சுமாராகவே ஓடின.இதனால் மனம் வெறுத்து திரை உலகிலிருந்து விலகி ஆன்மீகத்தில் புகுந்தார். கோவில் கோவிலாக சென்றார். இவரது திரை வாழ்கையில் 1940 இல் அதிர்ஷ்ட சக்கரம் சுழல ஆரம்பித்தது. நடித்தத படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றியைப் பெற்றன.அலெக்சாண்டர் டூமாஸ் என்ற பிரபல நாவலாசிரியரின் தி மேன் இன் தி அயன் மாஸ்க்  என்ற நாவலைத் தழுவி உத்தம புத்திரன் என்ற திரைப்படத்தை மாடர்ன் தியேட்டர்ஸார் 1940 இல் வெளியிட்டனர். இதில் இரட்டை வேடங்களில் சின்னாப்பா நடித்தார்.  அதில் வில்லன் சின்னப்பா தனது தம்பியான நல்ல சின்னப்பாவிற்கு முகமூடியை தலையில் அணிவிப்பார். தாடி வளர வளர மூச்சு முட்டி உயிர் போய்விடும் என்று கூறி அட்டகாசமாக சிரிப்பார். சிரிப்பில் கூட அவரது நடிப்பு வெளிப்பட்டது. தியேட்டரே அதிரும்படியான கைத்தட்டலும் சீழ்க்கை ஒலியும் ரசிகர்களிடமிருந்து கிளம்பும். இந்தப் படத்தில்தான் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" என்ற பாரதியாரின் பாடலை சின்னப்பா பாடுவார். அன்றைய பிரிட்டிஷ் அரசு பாடலுக்குத் தடை விதித்தது. பாடல் நீக்கப்பட்ட பின் தடையும் நீங்கியது.இந்த இமாலய வெற்றிக்குப் பிறகு சின்னப்பா நடித்த படங்கள் எல்லாமே வெற்றிப்படங்களே. வெற்றிக்கன்னி  சின்னப்பாவின் நெற்றியில் வெற்றித் திலகமிட்டு அவரை புகழின் உச்சியைத் தொடச் செய்தாள்.அடுத்து பட்கி  ராஜா பிலிம்சாரின் சூரிய மாலா சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அடுத்து வெளிவந்த கண்ணகி மாபெரும் வெற்றிப்படமாக மட்டுமல்ல இளங்கோவனின் கவிதை நட வசனத்தினால் சிகரத்தை தொட்டது. சின்னப்பாவும் கண்ணாம்பாவும் போட்டி போட்டு நடித்தனர். என் எஸ் கே, மதுரம் நகைச்சுவை காட்சிகள் மேலும் மெருகூட்டியது. கொலைக் களத்தில் கோவலன் பேசும் வசனங்கள்  காலத்தால் அழியாத நினைவுகள்.இந்தப் படம் வெளிவந்த போது நான் என் எம் போர்டு ஹை ஸ்கூலில் 9வது படித்துக்கொண்டிருந்தேன். நானும் எனது நண்பன் ராஜையாவும் தியேட்டர் வாசலில் அமர்ந்து படத்தின் வசனங்களை நோட்டில் எழுதினோம். நீண்ட காலம் அந்த நோட்டை பத்திரமாக வைத்திருந்தேன். இன்று நினைத்தாலும் அந்த வசனங்கள் நினைவுக்கு வருகின்றன. இந்தப் படத்தில் சின்னப்பா பாடிய சந்திரோதயம் இதிலே காணுவது உன் செந்தாமரை முகமே என்ற பாடலும் மாதவியை பிரிய  காரணமாக இருந்த தேவமகள் இவள் யார்? என்ற பாடலும் என்றும் நினைவில் நிற்பவை.  இந்தப் படத்தின் மூலம் பாகவதருக்கு இணையான சூப்பர் ஸ்டாரானார் சின்னப்பா.1944 இல் வெளிவந்த ஜகதலப்பிரதாபன்  சின்னப்பாவின் திரைவாழ்வின் பயணத்தில் மற்றும் ஒரு மைல் கல் எனலாம். கர்ண பரம்பரை ராஜா ராணி கதைதான். சின்னப்பா முழுத் திறமையையும் வெளிப்படுத்திய வெற்றிப் படம். சின்னப்பாவின் நண்பனாக என் எஸ் கே நடிப்பார். சின்னப்பாவின் ஜோடியாக எம் எஸ் சரோஜினி, யூ ஆர்  ஜீவரத்தினம், எஸ் வரலட்சுமி, டி ஒ ஜெயலட்சுமி நடித்தனர். படத்தை இயக்குனர் ஸ்ரீராமுலு விறுவிறுப்பாக இயக்கியிருந்தார். கத்திச்சண்டை, மல்யுத்தம் ஆகிய காட்சிகளில் சின்னப்பா தனது முழுத் திறமையையும் காட்டியிருப்பார். கிளைமாக்ஸ் காட்சியில் சின்னப்பா 5 வேடங்களில் மேடையில் கச்சேரி நடத்துவார். ஒரே காட்சியில் ஐந்து சின்னப்பாக்களைக் கண்ட ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து ஆரவாரம் செய்தனர். ஒரு வருடம் வரை ஓடிய சூப்பர் ஹிட் படம் இது.இதன் பின் கே சுப்பிரமணியத்தின் இயக்கத்தில் விகடகவி ஏற்ன நகைச்சுவை சமூகப் படத்தில் நடித்தார். சின்னப்பா நடித்த ஒரே ஒரு சமூகப் படம் இதுதான். தன்னால் நகைச்சுவையாகவும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்தார். படம் சுமாராக ஓடியது. இந்தப் படத்தில் ஒரு புதுமை. எம் கே டி பாடிய பாடல் ஒன்று இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தது. இதன் பின் 1947 இல்  பங்கஜவல்லி என்ற படத்தில்  நடித்தார். சரியாக ஓடவில்லை. 1949 இல் வந்த மங்கையர்க்கரசி  ஒரு வெற்றிப்படம். தாத்தாவாக  தாடியுடன் மகனாக  மீசையுடன் பேரனாக  மீசை இல்லாமல் தோன்றுவார். ஒரு காட்சியில் இந்த மூன்று சின்னப்பாக்களும் தோன்றுவது அருமையாக இருக்கும்.பாகவதரை வைத்து அசோக்குமார் என்ற படத்தை எடுத்த முருகன் டாக்கீஸார் சின்னப்பாவை வைத்து ரத்னகுமார் என்ற படத்தை 1949இல் எடுத்தனர். பானுமதி ஜோடியாக நடித்தார். மற்றும் எம் ஜி ஆர், என் எஸ் கே, மதுரம் நடித்தனர். கிருஷ்ணன் பஞ்சுவின் இயக்கம். இரு ஒரு மாயாஜாலக் கதை. சுமாராகவே ஓடியது.  "தவறான ஒரு சிறு சொல் கூட எனக்கு கோபத்தைக் கிளப்பிவிடும். நான் அசல் தமிழன். தன்மானம் மிக்கவன்" என்று சின்னப்பா இந்தப் படத்தில் அடிக்கடி  வசனம் பேசுவார். இவரது தோற்றம் கரடுமுரடாக இருந்தாலும்  பழகுவதற்கு இனியவர்.நடிக மன்னன் என்ற பெயர் பெற்றவரும் வீரதீரச் செயல்களால் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவருமான பி யு சின்னப்பா புதுக்கோட்டையில் உள்ள  தந்து வீட்டில் திடீரென 23-9-51 இல் மரணமடைந்தார். அவரது வீட்டிலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டு கல்லறையும் எழுப்பப்பட்டது. புதுக்கோட்டையில் இவர் வீடுகளை வாங்கிக் குவித்தபோது இவர் வீடுகள் வாங்குவதை வாங்குவதை புதுக்கோட்டை சமஸ்தானம் தடை செய்தது. இதே போல பாகவதர் திருச்சியில் வீடுகள் வாங்குவதையும் அரசாங்கம் தடை செய்தது. எதிரும் புதிருமாக வலம் வந்த இரு துருவங்களான இருவருக்கும் ஒரே மாதிரி நிகழ்வுகள் நடந்தது விசித்திரமான ஒற்றுமை இல்லையா?


சின்னப்பா இறக்கும் முன் சுதர்சன் என்ற படத்தில் நடித்திருந்தார். கொடியாக கண்ணாம்பாவும் யோக மங்கலமும் நடித்தனர். பாகவதர் நடித்த ஹரிதாஸ் படத்தை எடுத்த ராயல் டாக்கீசார்தான் இதையும் எடுத்தனர். கதை வசனத்தை இளங்கோவனும்,எ எஸ் ஏ சாமியும் இணைந்து எழுதினார்கள். ஹரிதாஸ் படத்தை இயக்கிய சுந்தர் ராவ் நட்கர்நியும் சாமியும் இதை டைரக்ட் செய்தனர். சின்னப்பா இறந்த பிறகு வெளியிடப்பட்ட இப்படம் சுமாராகத்தான் ஓடியது. 

பிருதிவிராஜன் என்ற படத்தில் தன்னுடன்  சம்யுக்தையாக நடித்த நடிகை சகுந்தலாவை காதலித்து மணந்துகொண்டார் சின்னப்பா. திருமணத்திற்குப் பின் சகுந்தலா நடிப்பதை விட்டுவிட்டார். இவர்களுக்கு ஒரே ஒரு மகன் ராஜா பகதூர்.

சினிமாவில் பேரும் புகழும் பெற்றவர்களின்  கடைசி காலம் வறுமையில்தான் முடிந்திருக்கிறது. இந்த சாபக் கேட்டிற்கு சகுந்தலாவின் குடும்பமும் விதிவிலக்காகி விட முடியுமா?

இத்துடன் தமிழக திரை உலகின் சமகாலத்தில் வாழ்ந்த பாகவதர், சின்னப்பா  என்ற இரண்டு சூப்பர் ஸ்டார்களின் வாழ்க்கை நிகழ்வுகள் முடிவு பெறுகின்றன. இந்த தகவல்கள் எல்லாம் பல பத்திரிகைகள், செய்திகளில் இருந்தும், என் நினைவிலிருந்தும் தொகுக்கப்பட்டுள்ளன. 

2 comments:

  1. திரு விக்டர்,

    பழைய காலத்து ஆட்களைப் பற்றி நிறைய தகவல்கள் நன்றாக சொல்கிறீர்கள். உங்கள் எழுத்தும் நன்றாக இருக்கிறது. படிக்க இன்பமாக இருக்கிறது. தொடருங்கள். என் மனம் கவர்ந்த எம் ஜி ஆர் பற்றி எழுதுங்கள்.

    ReplyDelete
  2. அஹா அருமையான தகவல். பிரம்பிப்பு வருகிறது. நன்றி விக்டர் அவர்களே.

    ReplyDelete