Monday, March 2, 2015

முதல் சூப்பர் ஸ்டார்.

எம் கே தியாகராஜ பாகவதர்.

தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார். தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர். தனது இனிமையான பாடல்களினால் தனது வசீகரமான அழகினாலும் ஈர்க்கப்பட்டு மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

இவர் நடித்த முதல் படம் பவளக்கொடி 1934இல் வெளிவந்தது. 55 பாடல்களைக் கொண்ட இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. கே சுப்பிரமணியம் இயக்கினார்.பிரபல நாட்டிய மேதை பத்மா சுப்பிரமணியம் இவரது மகள்.

இதைத் தொடர்ந்து 10 ஆண்டுகளில் 9 வெற்றிப் படங்களில் நடித்து சாதனை படைத்தார் பாகவதர். இவர் கன்னடத்து பிரபல பாடகி அஸ்வத்தம்மாவுடன் நடித்த சிந்தாமணி படம் 1937இல் வெளிவந்து வசூலைக் குவித்தது. அந்தப் பணத்தில் கட்டப்பட்டதுதான் மதுரை சிந்தாமணி டாக்கீஸ். இதை இயக்கியவர் பிரபல இயக்குனர் y v ராவ். இவர் நடிகை லட்சுமியின் தந்தை என்பது உபரித் தகவல்.

1937இல் எம் ஆர் சந்தான லட்சுமியுடன் நடித்த அம்பிகாபதி படத்தின் மூலம் வசனகர்த்தாவாக இளங்கோவன் முதன் முதலாக அறிமுகமானார். படத்தை இயக்கிவர் எல்லிஸ் ஆர் டங்கன் என்ற அமெரிக்கர். ஆங்கிலப் படமான ரோமியோ ஜூலியட் டுக்கு இணையாக எடுக்கப்பட்ட தமிழ் காவியம். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.

1937இல் வெளிவந்த திருநீலகண்டர்  பாடல்களுக்காகவே ஓடிய படம். இவர் பாடிய 'தீன கருணாகரனே நடராஜா' 'மறைவாய் புதைத்த ஓடு ' என்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆயின. 

அதே வருடம் வெளியான அசோக் குமார் படத்தில்தான் சித்தூர் வி நாகையா, பி கண்ணாம்பா தெலுங்கிலிருந்து முதன் முதலாக தமிழுக்கு அறிமுகமானார்கள்.  இதில்  பாகவதர் பாடிய  'உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ', 'சத்வகுனபோதன்', தியானமே எனது மனது நிறைந்தது' என்ற பாடல்கள் தமிழமெங்கும் பாடப்பட்டவை. இந்தப் படத்தில் எம் ஜி ஆர் பாகவதரின் நண்பனாக நடித்திருப்பார் என்பது ஒரு ஆச்சர்யமான தகவல்.

பட்சி ராஜா பிலிம்ஸின் ' சிவகவி' இதே ஆண்டு வெளிவந்தது. திரைக்கதை வசனம் இளங்கோவன். தமிழக திரை உலகின் கனவுக்கன்னி டி ஆர் ராஜ குமாரி முதன் முதலாக பாகவதருடன் நடித்தார் நாட்டியக்காரியாக.தமிழக மக்கள் 20,30 முறை பார்த்த இசைக் காவியம் இந்தப் படம்.

1944 தீபாவளியன்று வெளியான படம் ' ஹரிதாஸ்'. பிரபல பாடகி என் சி வசந்த கோகிலம் கதாநாயகியாகவும் டி ஆர் ராஜகுமாரி தாசியாகவும் நடித்த படம்.  பாகவதரின் 9வது தொடர் வெற்றிப் படம். பாடல்கள் பாபநாசம் சிவன். இசை ஜி ராமநாதன்.இயக்கம் சுந்தர் ராவ் நட்கர்னி. மூன்று தீபாவளிகளாக தொடர்ந்து  ஓடி வசூலை குவித்த படம்.

     இன்னும் சில படங்களில் நடிக்க ஆரம்பித்தபோது லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதருக்கும் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தமிழகமே கண்ணீர் கடலில் மிதந்தது. பிரபல வழக்கறிஞர் திரு.எத்திராஜ் மூலமாக லண்டன் பிரிவு கவுன்சிலுக்கு அப்பீல் செய்யப்பட்டு 25-4-47 இல் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். பாகவதர், கலைவாணர் இருவரும் சிறையில் இருந்த காலம் 2 வருடம் 2 மாதம் 13 நாட்கள்.

சிறையிலிருந்து திரும்பி வந்ததும் 1948இல் ராஜமுத்திரை என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார்.பிரபல பாடகி எம் எல் வசந்தகுமாரி பாடல்களைப் பாடி இருந்தார். கதாநாயகி திருமதி வி என் ஜானகி, எம் ஜி ஆரின் துணைவியார். கதை வசனத்தை பிரபல சிறுகதை ஆசிரியர் இக்கால சிறுகதை எழுத்தாளர்களின் முன்னோடியான புதுமைப்பித்தன் எழுதினார். முடியும் தருவாயில் அவர் திடீரென்று மரணம் அடைந்ததால் மீதி வசனங்களை  நாஞ்சில் ராஜப்பா எழுதி முடித்தார். படம் வெளிவரும் முன்னே இசைத்தட்டுக்கள் வெளியிடப்பட்டு விற்பனையில் சாதனை படைத்தன. இசை சி ஆர் சுப்புராமன். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆயின. இதில் எம் ஜி ஆர் எம் ஜி சக்ரபாணி நடித்திருந்தனர். இந்தப்  படத்தில்தான் திருமதி பானுமதி தெலுங்கிலிருந்து தமிழ் திரைப் பட உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனாலும் படம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.10 வாரங்களே ஓடியது.பாகவதர் மனம் தளர்ந்தார். பாகவதரின் திரை உலகின் முதல் தோல்வி இதுவே.

இருந்தாலும் தனது 11வது படமான அமரகவியை தயாரித்தார். டி ஆர் ராஜகுமாரி, பி எஸ் சரோஜா ஜோடியாக நடித்தனர். இசை ஜி ராமநாதன். வசனம் பாடல்கள் கவிஞர் சுரதா. இதில்தான் அவர் அறிமுகமானார்.

பாகவதரின் 12வது படம் சியாமளா. தெலுங்கில் எஸ் வரலட்சுமி கதாநாயகியாக நடித்த படத்திலோ கதாநாயகனை நீக்கிவிட்டு பாகவதரை நடிக்கச் செய்து தமிழில் தயாரித்தனர். இதில் பாகவதர் பாடிய ' ராஜான் மகாராஜன்' என்ற பாடல் பிரபலமாகியது. பாகவதர் மீசையுடன் நடித்த ஒரே ஒரு படம் இதுவே. படம் ஓடவில்லை.

பாகவதரின் 13வது படம் 'புதுவாழ்வு'. இதை இயக்கம் பொறுப்பை பாகவதரே ஏற்றார். லலிதா இதில் ஜோடியாக நடித்தார். மாதுரி தேவி, டி எஸ் பாலையா, என் எஸ் கே , மதுரம் இதில் நடித்தனர். படம் சுமாராகவே ஓடியது.

பாகவதரின் கடைசிப் படம் சிவகாமி.இதில் ஜி வரலட்சுமி ஜோடியாக நடித்தார். தெலுங்கில் பிரபல நடிகர் ஜக்கையா, நடிகை ஜெயசித்ராவின் தாயார் ஜெயஸ்ரீ இளம் ஜோடியாக நடித்தனர்.படம் சுமாராக ஓடியது.

பாகவதர் என்ற  தமிழக திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் தொடர்ந்து 9 வெற்றிப் படங்களை தந்து தனது இனிய இசையால் தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்று விட்ட ஏழிசை மன்னர். மன்னர் போலவே அரண்மனை கட்டி வாழ்ந்தவர். மறைந்து விட்டாலும் மக்கள் அவரை அவரது நினைவுகளை மறந்துவிடவில்லை. அவர் வசித்த திருச்சியில் உள்ள வீட்டில் தற்போது மாவட்ட போக்குவரத்து அலுவலகம் செயல்பல்டுகிறது. பாகவதர் பங்களா ஸ்டாப்  என்றே அது இன்றும் அழைக்கப்படுகிறது. பெயரே பாகவதர் பங்களா. திருச்சியில் பாகவதர் காலனி ஒன்றும் இருக்கிறது. சிறையிலிருந்து திரும்பிய பிறகும் இவர் நம்பிக்கையை இழக்கவில்லை. சாம்பலில் இருந்து மீண்டுஎழும் பீனிக்ஸ் பறவையைப் போல தோல்விகளை எல்லாம் மிதித்து வெற்றி நடை போட்டார். இவரைப் பற்றிய இன்னொரு செய்தி கூட கூறப்படுகிறது. அதாவது இவர் சாப்பிடும்போது சூடான சாதத்தில் தங்க ரேக்குகளை வைத்துவிடுவாராம். அவை அந்த சூட்டில் கரைந்து உணவுடன் கலந்து விடுமாம். அதை அப்படியே சாப்பிடுவாராம். அதனால்தான் அவரது மேனி பொன்னிறத்தில் இருந்ததாம். இது கற்பனையாகக் கூட இருக்கலாம். அல்லது இவரது வசீகரத்திற்கு அதிலும் பெண்களை கவர்ந்திழுக்கும் அழகுக்கு காராணமாகவும் இருக்கலாம் இல்லையா?


2 comments:

  1. மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் விக்டர். அந்த காலத்திற்கே சென்று வந்ததுபோல இருந்தது.

    ReplyDelete
  2. அருமை விக்டர் ஐயா.

    ReplyDelete