Wednesday, March 18, 2015

மரண ஓலம்


அலைகடலின் ஆர்ப்பரித்து எழும் அலைகளின் ஓலத்தை கேட்டிருக்கிறோம். சுழன்றடிக்கும் சூறாவளியின் விர் விர் ரென்ற ஓலத்தை கேட்டிருக்கிறோம். மரங்களை வேருடன் பிடுங்கி எரியும் புயல் காற்றின் ஓலத்தைக் கேட்டிருக்கிறோம். வானத்தையும் பூமியையும் இணைக்கும் பெரு மழையின்  ஓலத்தைக் கேட்டிருக்கிறோம். மரணத்தின் ஓலத்தை யாராவது கேட்டதுண்டா?நான் கேட்டிருக்கின்றேன்.

நான் 50 வருடங்களுக்கு முன்பாக மரணத்தின் வாசலிலிருந்து மீண்ட நிகழ்வினை இங்கு சொல்ல விரும்புகின்றேன்.

அப்போது நான் திருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டை பஞ்சாயத்து யூனியனில் கடன் வழங்கும் துணை வட்டாசியாளராகப் பணி செய்து கொண்டிருந்தேன். எனது மைத்துனன் -என் மனைவியின் தம்பி- பிரான்சிஸ் வேலை தேடிக்கொண்டிருந்த சமயம். என் வீட்டிற்க்கு வந்திருந்தான். அவன் ஒரு சிறந்த பாட்மிண்டன் பிளேயர். எங்கள்  ஊரில் விளையாடி ஒரு மேஜை விளக்கை பரிசாக வாங்கி வந்திருந்தான்.

அன்று ஞாயிற்றுக் கிழமை. வீட்டில்தான் இருந்தேன். சாயந்திரம் 4 மணி இருக்கும்.  கீழே வைக்க வயர் போதவில்லை என்பதால்  அவன் கொண்டுவந்திருந்த மேஜை விளக்கை என் கைகளில் பிடித்துக் கொண்டிருந்தேன். அவன் சுவிட்சைப் போட்டான். அவ்வளவுதான். என் உடலில் மின்சாரம் பாய்ந்தது. உதறியும் விளக்கு கையிலிருந்து விழவில்லை.

அப்போது என் குரலிலிருந்து ஒரு ஓலம் கிளம்பியது. அது மரணத்தின் ஓலம் என்பதை உணர்ந்தேன். இதைப் பார்த்து என்னிடம் ஓடி வந்து என்னைத் தொட்டான் என் மைத்துனன். தொட்டவன் தூக்கி எறியப்பட்டான்.

அந்த காலத்தில் சுவிட்சின் அடியில் ஒரு பகுதி நீட்டிக்கொண்டிருக்கும்.அதை  அணைத்துவிட்டால் கரண்ட் சப்ளை நின்றுவிடும். நான் பேச முடியாத நிலையில் சுவிட்சை சுட்டிக்காட்டினேன். அவன் அதை உடனே புரிந்து கொண்டு அதை அணைத்து விட்டான். கையிலிருந்த விளக்கு கீழே விழுந்தது. நான் உயிர் பிழைத்தேன்.

அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் என் உடல் நடுங்குகின்றது. இப்போதும் 'நான் செத்துப் பிழைச்சவண்டா " என்ற எம் ஜி ஆர் பாடல் கேட்கும் போதெல்லாம் அந்த நிகழ்வு என் மனத்திரையில் காட்சியாக ஓடுகின்றது. நான் செத்துப் பிழைத்தவன்தான்.

நான் ஓலமிடும்போது தன் கையிலிருந்த குழந்தையை கீழே போட்டுவிட்டு 'ஏசுவே " என்று என் மனைவி குரல் கொடுத்தது என் காதுகளில் இன்னும் ஒலிக்கிறது. என்னை சாவின் கரங்களிடமிருந்து ஏசுவின் கரம் மீட்டதை உணர்ந்தேன்.

2 comments:

  1. அருமையான பதிவு. சிறப்பாக எழுதி உள்ளீர்கள். படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.

    ReplyDelete
  2. அப்பப்பா பயங்கரம்!

    ReplyDelete